அனுர குமார 
அரசியல் பேட்டிகள்

சீனா பக்கம் சாய்கிறதா இலங்கை?

இரா. தமிழ்க்கனல்

கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்து பெரு வெற்றி பெற்றிருக்கிறது, அதிபர் அனுர குமார திசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி. குறிப்பாக, ஈழத்தமிழர் கட்சிகளின் கோட்டையாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தில்கூட மூன்று இடங்களைப் பிடித்திருப்பது பெரும் ஆச்சர்யம். சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் கூட தோல்வியைத் தழுவி உள்ளனர். கொழும்பில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் அவர்களிடம் இதுகுறித்துப் பேசியதிலிருந்து...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றது எப்படி.. அதுவும் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளைவிடக் கூடுதலாக...?

இலங்கையில் விகிதாச்சார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தனியொரு கட்சிக் கூட்டணி இப்படியான மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றிருப்பது வரலாற்று நிகழ்வு. கடந்த கால அரசியல் தலைமைகளின் மீது மக்கள் கடுமையான அதிருப்தி அடைந்திருந்தனர் என்பதையே இது காட்டுகிறது. நடப்பு நிலைமையிலிருந்து மாற்றம் வரவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அதுவே இந்தத் தேர்தலில் எதிரொலித்திருக்கிறது. வடக்கு, கிழக்கில் (ஈழம்) தமிழ்த் தலைமைகள் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியும் விரக்தியும் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்தான் தமிழரசுக் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஈழத்தமிழர் பகுதிகளில் அனுரகுமாராவைவிட சஜித்துக்கும் இரணிலுக்கும்தானே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. இந்த முறை எப்படி...

உண்மைதான். வெல்லக்கூடியவருக்கே வாக்களிக்கலாம் என வாக்காளர்கள் இந்த முறை முடிவுசெய்திருக்கலாம். மற்றபடி கடந்த முறை அதிபர் தேர்தலில் அதிக முறை வடக்கு, கிழக்கில் சஜித் பிரேமதாசா பிரச்சாரம் செய்தார். இந்த முறை இங்கு அவர் சரிவர பிரச்சாரத்துக்கே வரவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம். இன்னுமொன்று, அவரை கடந்த முறை தமிழரசுக் கட்சி ஆதரித்தது. இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டது.

ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலைப்புலிகள் காலத்திலேயே தேர்தலில் வென்ற வல்லமை படைத்தவர்தானே... அவர் முதல் முறையாக இப்போது தோல்வி அடைந்திருக்கிறார் அல்லவா?

டக்ளஸ் 1994ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்துவந்தார். அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார். டக்ளசின் ஆதரவுத் தளம் மீன்பிடிக் கிராமங்களைக் கொண்டது. அவரின் பதவிக்காலத்தில் தங்களுக்கான பிரச்னைகளை அமைச்சராக இருந்தும் அவரால் தீர்க்க முடியவில்லை என்கிற ஆதங்கம் அவர்களிடத்திலே ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அனுசரனையோடு அணுகியது. மேலும், விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தேசிய அளவில் மானியம் வழங்கும் அறிவிப்பு ஒன்றையும் அதிபர் அனுர வெளியிட்டது, மீன்பிடி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம்.

தென்னிலங்கை (சிங்கள)க் கட்சி ஒன்று வடக்கில் இந்த அளவுக்கு வெற்றியை ஈட்டியிருப்பதன் மூலம், ஈழத்தமிழர் தேசியம் எனும் அரசியல் கேள்விக்குரியதாக ஆகி இருக்கிறதா?

நாடு விடுதலை அடைந்தது தொடக்கம் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தலைமைகளின் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, போராட்ட இயக்கங்களாக இருந்து கட்சிகளாக ஆனவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைதான் இதுவரை தமிழ் மக்கள் சார்ந்து உள்ளனர். அந்த அடிப்படையை எப்போதும் விடப்போவதில்லை. ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகளிடம் அதிருப்தியும் ஏமாற்றமுமே கிடைத்ததாக மக்கள் கருதும் இடத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தங்களின் அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என அவர்கள் எண்ணியிருக்கக்கூடும்.

இடதுசாரி அரசாங்கம் என்பதால் சீனத்தை நோக்கிச் செல்கிறதா, அனுர அரசாங்கம்?

தற்போது இலங்கையில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதான அங்கமாக இருப்பது ஜே.வி.பி.தான்.

ஜே.வி.பி. இரண்டு தடவைகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தோல்வியடைந்த ஒரு அமைப்பு. இந்த இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போதும் இந்திய மேலாதிக்கத்தை எதிா்ப்பது என்பது அவா்களது கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது. மறுபுறத்தில் சீனாவுக்கு ஆதரவான ஓர் அமைப்பாகத்தான் அது அடையாளம் காணப்பட்டிருந்தது. இதன் காரணமாகத்தான் அநுர அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவானதாகச் செல்லும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

சீனாவும் அநுர அரசாங்கம் தமக்கு சாா்பானதாக இருக்கும் என்று நம்புவதாகவே தெரிகின்றது. பொதுத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனடியாகவே யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை கொழும்பிலுள்ள சீனத் துாதுவா் மேற்கொண்டிருந்தாா். அதனைத் தொடா்ந்து கிழக்கு மாகாணத்துக்கும் சென்றிருந்தாா்.

கடந்த காலங்களில் சீன நிறுவனங்கள் சில வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முற்பட்டபோது அவை தடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் சீன நிறுவனம் ஒன்று மூன்று தீவுகளில் சூரிய மின்சக்தித் திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கான உடன்படிக்கையை செய்திருந்தது. பின்னா் அது ரத்துச் செய்யப்பட்டது. இந்திய அழுத்தம்தான் இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

அநுர அரசாங்கம் பெருமளவுக்கு சீன சாா்பாக இருந்தாலும் இந்தியாவுக்கு சீற்றத்தை அல்லது பாதுகாப்பு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் சீனாவுடன் நெருங்கிச் செல்வதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு செல்வது நீண்டகால அடிப்படையில் தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அவா்களிடம் உள்ளது. அது வரலாற்றிலிருந்து படித்துக்கொண்ட பாடம்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்த அரசு என்ன செய்யும்?

பெருமளவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்துவிட்ட பாதையில்தான் இவா்களும் பயணம் செய்யப்போகிறாா்கள். அது தவிா்க்க முடியாதது.

கடன் மீளளிப்பு போன்றவற்றுக்கு இது அவசியம். அநுர குமார ஜனாதிபதியாகப் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் ஐ.எம்.எப். அமைப்புடன் மூன்று தடவைகள் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றாா். இது ரணில் முன்னெடுத்த பாதையே. பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் ஒன்றையும் முன்னெடுக்க அநுர அரசு திட்டமிடுகின்றது. ஊழல், மோசடிகளைத் தடுப்பதன் மூலமாகவே பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற எதிா்பாா்ப்பும் அவா்களிடம் உள்ளது. பொது நலனுடன் நிதி ஒழுக்கத்தை சமநிலைப்படுத்துதல், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீா்வு மற்றும் இந்தியா மற்றும் சீனா போன்ற பெரும் வல்லரசுகளுடன் சமநிலை பேணுதல் உட்பட குறிப்பிடத்தக்க சவால்களை அநுர அரசு எதிர்கொள்கிறது. இதில் அவரால் எந்தளவுக்கு வெற்றிகொள்ள முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram